மிசௌரி தமிழ்ப் பள்ளியின் வரலாற்று சிறப்புமிக்க பவள ஆண்டில் (35 ஆம் ஆண்டு) அரும்பு வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

தமிழ் அன்னைக்கு முதற்கண் வணக்கம்.

உலகின் முதல் மொழி; மூத்த மொழி!

பல்லாயிரம் நீதிநெறி நூல்கள் கொண்ட அறம் கூறும் மொழி!

இயல், இசை, நாடக முத்தமிழ் செம்மொழி தமிழ்!

கன்னித்தமிழ் குன்றா இளமையுடையது: “சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று பாடினார் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார். முன்னை பழமைக்கும் பழமையாய், பின்னை புதுமைக்கும் புதுமையாய் இலகுகிறது தமிழ் மொழி.

செயின்ட் லூயிஸ் மாநகரத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ்ப் பள்ளி சிறிய அளவில் நான்கைந்து மாணவர்களோடு தொடங்கப்பட்டது. இன்று கற்பக விருட்சமாக இரண்டு கிளைகளில் பரந்து விரிந்து, அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழக பாடத் திட்டத்தின் மூலம், முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ செல்வங்களுக்கு நம் தமிழைக் கற்றுக் கொடுத்து வருகிறது நம் மிசௌரி தமிழ்ப் பள்ளி. இதற்காக உழைத்த, உழைத்து கொண்டிருக்கிற அனைத்து தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைத்த தலைவர்களுக்கும், செயற்குழுவிற்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பொதுப் பள்ளிக்கு நிகராக வரையறுக்கப்பட்ட மழலை முதல் நிலை 8 வரை ஒன்பது வருட பாட நிலைகள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட ஆசிரியர்கள், கையேடுகள், காக்னியாவின் தர மதிப்பீடு, என இருப்பது நம் பள்ளியின் சிறப்பு.

நம் மிசௌரி தமிழ்ப் பள்ளி கல்வியையும் ஒழுக்கத்தையும் தனது இரு கண்களாக போற்ற மாணவ செல்வங்களுக்கு கற்று கொடுத்து வருகிறது. நம் தமிழ் மொழியை கற்று, தேர்ந்து, சிறந்த மாணவர்களாக உருவாக்குவதற்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களும், கல்வி கற்கும் சூழ்நிலைகளும், ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளும் ஒரு சிறந்த பள்ளிக்கு மிக முக்கியம். அதை நம் மிசௌரி தமிழ்ப் பள்ளி சிறப்பாக செய்து வருகிறது என்பதில் பெருமை கொள்வோம். வருடத்திற்கு இருமுறை மாணவர்களுக்கு மொழித்திறன் மதிப்பீடு (SURWEP) செய்யப்படுகிறது. மேலும் ELEOT ஆய்வு செய்வதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெற்ற பள்ளியின் தன்னார்வலர்கள், வகுப்பறையில் ஆசிரியர்களை ஆய்வு செய்து (ELEOT) செயற்குழுவிற்கு பரிந்துரை செய்வது பள்ளியின் தரத்தை உயர்த்தி வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவில் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறுகின்றனர். இளையோர் தன்னார்வலராக தமிழ்ப் பள்ளியில் ஒன்பது வருட படிப்பை முடித்த மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் வகுப்பறையிலும், இதர தன்னார்வத் தொண்டுகளிலும் சிறப்பாக பங்குபெறுகின்றனர்.

வகுப்பறையில் மட்டும் கல்வி என்று நிற்காமல், தமிழ்த் தேனீ மூலம் திருக்குறள், கதைகள், பாடல்கள், செய்யுள், மூதுரை, பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி , என மாணவர்களின் திறன்களை வளர்த்து வருகிறோம். மாணவர்களின் கலை மற்றும் கைவண்ண திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வருடா வருடம் தமிழ்ப் பள்ளி அரும்பு இதழை வெளியிட்டு வருகிறது. மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவில் தமிழர் அடையாளத்தையும், கலைகளையும், பண்பாட்டையும், இலக்கியங்களையும், ஆடல் பாடல் நாட்டிய நாடகங்கள் மூலம் மேடையேற்றி, தானும் கற்று நம் அனைவருக்கும் கற்று தருகிறார்கள் நம் மாணவர்கள்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்

என்ற வள்ளுவ தேவனாரின் வாக்கிற்கிணங்க நம் தமிழ்ப் பள்ளி முழுமையாக ஆராய்ந்தறிந்து மொழியை கற்றுக் கொடுத்து வருவதால், மாணவர்கள் வெற்றி பெற்று பொதுப் பள்ளியில் தமிழ் மொழிக்கென இரண்டு தரப் புள்ளிகள் மற்றும் இருமொழிச் சான்றிதழ்களும் மிக எளிதாக பெற்று வருகிறார்கள்.

மிசௌரி தமிழ்ப் பள்ளியின் பவள ஆண்டு (35) கால வரலாற்றில் எனது 20வது வருட தன்னார்வல பணியை நிறைவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நம் தமிழ்ப் பள்ளியின் 35 ஆண்டுகளின் கட்டமைப்பை உற்று நோக்கினால், அனைத்து தன்னார்வலர்களும் மொழிக்கும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் முதன்மை அளித்து உழைத்ததால்தான் இவ்வெற்றி சாத்தியமாகியது என்று தெரிகிறது. இன்று பணியாற்றிவருகிற நூற்று இருபதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை போற்றிப் பெருமை கொள்வோம்.

35 வருட நினைவுகள்

தமிழர்கள் சிறந்த உழைப்பாளிகள், நாளையைப் பற்றிய சிறந்த சிந்தனையாளர்கள். மிசௌரி தமிழ்ப் பள்ளியும் மிசௌரி தமிழ்ச் சங்கமும் இணைந்து தமிழ்க் கல்வி, தமிழாராய்ச்சி மற்றும் கலாச்சார மையத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற பல வருட கனவை 2023ஆம் ஆண்டு டிசம்பரில் இரு வருட உழைப்பிற்கு பிறகு சாத்தியமாக்கியது பெருமை (6.99 Acres in 17800 Mueller Rd, Wildwood, MO 63038). முதல் நிதி திரட்டு விழாவில், தாங்கள் அனைவரும் பெருவாரியாக நன்கொடையளித்து ஆதரவு அளித்தமைக்கு மிக்க நன்றி. அடுத்த கட்டமாக, கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதியை திரட்டும் விதமாக அண்டை மாநில தமிழ் மொழிப் பற்றாளர்களையும், நமது தமிழ் நாடு அரசையும் உதவுமாறு கேட்டு வருகிறோம். உங்களுடைய தொடர்ந்த பங்களிப்பும் ஒத்துழைப்பும் தேவை.

தன்னார்வலர்கள் மொழியை மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் நேரத்தின் மூலமாகவும், அலுவலகத்தில் இருந்து நிதி மானியம் (Grant) நன்கொடை பெற்றும் உதவி வருகிறார்கள். 501(c)(3) மூலமாக பள்ளிக்கு நிதி அளிப்பவர்கள், அதற்கான வரிவிலக்கு பெற முடிகிறது. மேலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அதற்கு இணையான நிதியை பெற முடிகிறது.

பிரதிபலன் எதிர்பாராது தமிழ் அறப்பணியில் ஈடுபடும் அனைத்து தன்னார்வலர்களையும் கவுரவித்து, அறுசுவை உணவு அளித்து, பாராட்டி, நன்றி தெரிவிக்கும் விழா கல்வியாண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. "சிநேகிதியே" நிகழ்ச்சிகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியைகளின் நட்பை வளர்க்கவும், சிந்தனை பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.

பள்ளியின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் அவசியம். பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி பெற்றோர் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் இணைந்து பள்ளியை அடுத்த நிலைக்கு உயர்த்தச் செய்வோம்.

மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!